Tuesday, June 7, 2011

வளரும்... ஆனா வளராது.. !

நல்லா இருக்கீங்களா ? என்னடா தலைப்பு மொட்டையா இருக்கேனு பார்த்தீங்களா?? நானும் இந்த பதிவுக்கு என்னனமோ தலைப்பு யோசிச்சு பார்த்தேன்.. எதுமே செட் ஆகல. சரி முதல்ல எதாவது தலைப்பு போட்டு எழுத ஆரம்பிப்போம்.. பொறவு பாத்துக்கலாம்னு விட்டுட்டேன்.. "இந்தியா" - இந்த வார்த்தைய, பதிவோட தலைப்புக்கு முன்னாடி போட்டுகோங்க.. இதுல என்னப்பா உனக்கு டவுட்டுனு நீங்க கேட்கலாம்.. சத்தியமா எனக்கு இதுல தான் டவுட்டே! நான் சின்னபுள்ளயா இருக்கும் போது (ஹ்ம்ம்..6 வருசம் ஆச்சு!) "இந்தியா வளரும் நாடு"ன்னு சொன்னங்க! இப்பவும் அதே சொல்லிட்டு இருக்காங்க! செல் போன் வந்திருச்சு.. 2G ஊழல் நடந்து 3G தொடங்கிருச்சு.. ரெண்டு மூணு ராக்கெட் வேற விட்டோம், நாலு ஏவுகணை சோதனை, அப்புறம் Common Wealth Game (இதுலயும் ஊழல் நடந்துச்சாமே.. சின்ன பையன் இத பத்தி பேச கூடாதுனு எங்க அண்ணன் சொல்லிருக்காரு! நான் மாட்டேன்ப்பா! ), Cricket World Cup, IPL Session 4 ...

சரி.. வளர்ந்த நாடுன்னு சொல்லுவதற்கு எது அளவீடுனு வழக்கம் போலவே இணையத்துல தேடினேன்(ஓம் Googleலே சரணம் !). எதிர்பார்த்தது போலவே, ஒரு நாடு வளர்ந்த நாடு/ வளரும் நாடு-ன்னு மிகத்துள்ளியமான வரையறை கிடையாது! (தெரியும் மாப்ள,பண்ணவும் மாட்டானுக - உபயம் வளர்த்த நாடுகள்). இருந்த போதிலும், ஓரளவுக்கு குத்துமதிப்பா ஒரு நாடோட வளர்ச்சி - மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP Growth) , அல்லது தொழில்மயமாக்கம்(Industrialization), அல்லது மனித வளர்ச்சி சுட்டெண்(Human Development Index-கல்வி மற்றும் ஆயுள்காலமும் உட்பட) இவைகளால் அளவிடப்படுகின்றன.. இதெயெல்லாம் மீறி, வளர்ந்த நாட்டுக்கு நீங்கள் சலாம் போட தெரிஞ்சிருக்கணும்... (வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!)
அது என்ன கருமமாவே இருக்கட்டும்.. கொஞ்சம் இதை ஆழமாக ஊடுருவிப் பார்ப்பதற்கு 3 நிகழ்வுகளை உங்க முன்னாடி வைக்கிறேன்!

1. கடந்த வாரத்தில் Praba Kola என்கிற நச்சுக்கழிவுகளைத் தாங்கிய கப்பல், 'கப்பல் உடைக்கும் பணி' என்பதான போர்வையில் மிகக்கள்ளத்தனமாக குஜராத் துறைமுகத்திற்கு இந்திய அதிகாரிகளால் உள்ளே அனுமதிக்கப்பட்டது. இந்தக் கப்பல் தான் 2006ல், Ivory Coast என்கிற இடத்தில் நச்சுக்கழிவுகளைக் கொட்டி 16 பேர் மர்மமான முறையில் இறக்கக் காரணமாய் இருந்தது. இது தொடர்பான வழக்கு இன்றும் முடிக்கப்படவே இல்லை! (இது போன்ற கப்பல்கள் பெரும்பாலும் ஐரோப்பிய கம்பெனிகளுக்குச் சொந்தமானவை. பனாமா நாடுகளுக்கு விற்கப்பட்டு, பெயர் மட்டும் மாற்றம் செய்து, பின் கழிவுகளை எதாவது ஒரு வளரும் நாடுகளில் கொட்ட ஆயத்தப்படுத்தப்படுகின்றன.) சமூக ஆர்வலர்களின் கவனதிற்குவந்து, பின்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

2. Endosulfan என்கிற பூச்சிக்கொல்லி மருந்து- மிக உயரிய அளவில் நச்சுத்தன்மை கொண்டதாலும், உயிரியல் அமைப்புக்கே அழிவை ஏற்படுத்தக்கூடிய வல்லமை வாய்ந்ததாலும் வளர்ந்த உலக நாடுகள் இதை முற்றிலுமாக தடை செய்துவிட்டன.! கிட்டத்தட்ட 80 நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்து இன்னும் இந்தியாவில் தடை செய்யப்படவில்லை ! இதுபற்றி பத்திரிக்கைகளில் மூன்று நாட்களுக்கு வந்த செய்திகள், பிறகு என்ன ஆனது என்றே தெரியவில்லை. பல சமயங்களில் அரசின் வாய்ப்பூட்டை திறக்கின்ற சாவிகள் கூட மௌனித்துப்போகின்றன!

3. கொஞ்ச வருடங்களுக்கு முன்பு Pepsi, Coca Cola குளிர்பானங்களில் கலந்திருந்த நச்சுத்தன்மையின் அளவு குறித்து பெரிய அளவில் பேசப்பட்டதும், போராட்டங்கள் நடத்தப்பட்டதும், பின்பு அனைத்தும் நீர்த்துப்போய் இந்திரா நூரி Pepsi -ன் தலைவராக ஆனா பிறகு, பத்திரிக்கைகள் கொண்டாடிய விதம் வருத்ததிற்குரியதே!

இது எல்லாமே வளரும் நாடுகளில் வரிசையில் முன்னணியில் இருக்கின்ற இந்தியாவில் தான் நடக்கிறன.! என்னைப் பொறுத்தவரையில் இந்தியா வளர்த்த நாடக ஆவது வெறும் பகற்கனவே! ஊழலை ஒழிச்சா நாடு வளந்திரும்! அரசியல்வாதி ஒழுங்கா இருந்தா நாடு வளந்திரும்! லஞ்சம் இல்லேன்னா நாடு வளந்திரும்! அதிகாரிகள் சரியா வேலை செஞ்சா நாடு வளந்திரும்! என்னங்கடா கலர் கலரா ரீல் விடுறீங்க? சரி, எல்லாம் சொல்ற ரைட்டு! அப்போ நாட்டோட பிரஜையா இருக்க நாம சரியாய் இருக்கமா என்ன??!!

எங்கிருந்து வந்தார்கள் எல்லோரும்? டிக்கெட் waiting list ல இருந்தாலும் TTRர அட்ஜஸ்ட் பண்ணி உட்கார இடம் வாங்கிக்கலாம்னு போற ஆளு தானே நாம! வேலை சீக்கிரமா நடக்க 'பார்த்து பண்ணிக்கலாம் சார்'னு சொல்ற ஆட்கள் தானே நாம..! "இதுகொஞ்சம் சிக்கலான மேட்டர், கொஞ்சம் செலவு புடிக்கும்ங்களே!"னு பிட்ட போடுற ஆட்கள் நம்ம கிட்ட இல்லையா?? தப்புன்னு தெரிஞ்சாலும், அடிப்படை விலைவாசி ஏறிப்போனாலும், ஏதோ அவங்கள மட்டும் பாதிக்காத மாதிரி கரை வெட்டி கட்டிக்கிட்டு கட்சிக்காக அலையுற லோக்கல் கவுன்சிலர் நம்ம கூட புழங்குற ஆள் இல்லையா?? நம்ம சுத்தி இருக்க உறவு முறைகளில் யாராவது ஒருவர் கூட இந்த முகமாக பார்க்க முடியலன்னு சொல்லுங்க பார்ப்போம்? அம்மா டீச்சரா இருக்கலாம், அப்பா ஒரு அரசு அதிகாரியா இருக்கலாம், சித்தப்பா, மாமன், மச்சான், பங்காளினு ஏதாவது ஒரு வகையில் நாட்டோட தினச் சக்கரங்களை நகர்த்துகிற கடைக்கோடி அச்சாணியா இருக்குற நாம ஒழுங்கா நம்ம கடமைய செஞ்சா, இப்போ குறைசொல்லுற அத்தனை பிரச்சனைகளையும் ஊதித் தள்ளிரலாமே! அழுகிய குட்டையா இருக்க கூட்டத்துக்குள்ள இருந்து நல்ல தலைவனா வர போறாரு? கள்ளப்பயளுங்க தான் வருவாங்க!

நாடு சுதந்திரம் அடைஞ்சு 60 வருசத்திற்கு மேல ஆகுது.! இதுநாள் வரைக்கும் 'முறைப்படுத்தப்பட்ட ரேஷன் விநியோகம்' நம்மாள கொண்டு வர முடிஞ்சுதா? உங்களுக்குத் தெரிய கடைக்கோடி கிராமங்களுக்கு மருத்துவ வசதியும், கல்வி வசதியும், பாதுக்காப்பான குடிநீர், கழிப்பிட வசதி கிடையாது! (லாஸ்டா சொன்ன ரெண்டும் டவுன்ல கூடத்தான் இல்ல!) அட இவ்வளவு ஏன், சுதந்திரப்போராட்ட தியாகிகளுக்கு நம்மாள் இன்னும் பென்சன ஒழுங்கா குடுக்க முடியல! இந்தியா வளர்கிறது இந்தியா வளர்கிறதுனு யாருக்கு கூப்பாடு போடுறாங்கனு தெரியல! சமீபத்தில் உச்சநீதி மன்றமே "இரு வேறு இந்தியா இருப்பதை அனுமதிக்க முடியாது!" என்று சொல்லி இருக்கிறது! (ஒரு பக்கம் அசாத்திய வளர்ச்சி, மறுபக்கம் வறுமை!)

"வளரும் நாடுன்னாவே ரொம்ப கீழ் தனமா இருக்கும். மாடா இருந்தாலும் சரி, மனுசனா இருந்தாலும் சரி, உயிர்களுக்கு மதிப்பில்லை! லஞ்சமும் ஊழலும் மலிஞ்சு கெடக்கும். தொறந்த வீட்டுக்குள்ள யாரு வேணும்னாலும் உள்ள வரலாம், எதுவேணும்னாலும் விக்கலாம், எது வேணும்னாலும் செய்யலாம்! நீ ஏதும் கேட்கக்கூடாது ! ஏன்னா நான் வளர்ந்த நாடு!" என்கின்ற மனோபாவத்தில் கீழ் நோக்கி ஒரு ஆய்வுக்கூடமாக அல்லவா பார்க்கின்றன வளர்ந்த நாடுகள்!

தற்போது உலகில் வேறு எந்த நாட்டின் அளவிற்கும் இல்லாத 50% இளைஞர்களை மட்டுமே கொண்ட நாடு இந்தியா! வளர்ந்த நாடாய் ஆவதற்கும், வல்லரசாய் ஆவதற்கும் மிகத்தகுதியானது! ஆனா, வெள்ளைக்காரனுக்கு ஆமாஞ்சாமி போட்ட நம்மாள, திமிரோட எழுந்து நிக்குற வலிமையை நம்மை சுத்தி இருக்க சமுதாயதிற்கு - நாம குடுக்கவும் மறந்துட்டோம், எடுத்துக்கவும் மறந்துட்டோம்!

"We have been always noticed as Under Developing Country, because We are not behaving as Developed Country!"

ஒரு நல்ல குடிமகன் வளர்வதற்கு குடும்பமும் கல்விக்கூடங்களும் தான் மிக முக்கிய காரணிகள்! "நீ நல்லா படிச்சு, கைநிறையா சம்பாதிச்சு பெரிய ஆளா வரணும்டா"னு குடும்பத்திலயும், "இந்த Course படி, US செட்டில் ஆயிரலாம்!"னு காலேஜ்ல சொல்லி தாராங்க! "உனக்கெதுக்குடா இந்த வேல.. போய் பொழப்ப பாக்குறத விட்டுட்டு.."னு சொல்லி சொல்லியே எதிர்கால ஆலமரங்களை போன்சாய் மரங்களாக நம்ம வீட்டு அலங்கார அடுக்குகளில் வளர்க்கிறோம்! அப்போ நாடு ?? இன்னும் வளரும் நாடவே இருக்க வேண்டியது தான் ! உன்னோட கடமையா ஒழுங்கா செஞ்சவே நாடும், நம்ம சுத்தி இருக்க சமுதாயமும் நல்லா இருக்கும்னு சொல்லித்தர தயங்குகிறோம்! வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு நம்மக்கான கடமையின் விதையை மனசுல விதைக்க மறந்து (மறுத்து) போகிறோம்.!

"இது என் மக்களுக்கு எதிரானது, பாதுகாப்பற்றது! உன் பொருளை தூக்கிட்டு ஓடிரு!"னு என்றைக்கு ஒருமித்த குரல் தவறானவர்களுக்கு எதிராகக் கேட்கிறதோ அன்றைய தினத்தில் இருந்து இந்தியா உண்மையிலேயே கட்டமைக்கப்படுகிறது என்பதை உறுதி செய்து கொள்ளலாம்! தேவை நம் எண்ணத்திலும் செயலிலும் மாற்றம்! We must start behave as developed nation !!

“தட்டிக்கொடுக்கவும், தட்டிக்கேட்கவும் வார்த்தைகள் என்னவோ தயாராகத்தானிருக்கின்றன!
பாவம் நீங்கள் தான் பேசத் தயாரில்லை!!

2 comments:

  1. நண்பா , தங்களின் இந்த பதிவு மிக நன்றாக இருக்கிறது , தங்களின் இந்த தொடக்கத்திற்கு நன்றிகள் பல ,
    இங்கு நாம் முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய , அதே சமயம் உள்ளார்ந்து சிந்தித்து செயல் படவேண்டிய விஷயங்கள் மற்றும்
    அதை திறன் படசெய்ய அனைத்து தர பட்ட மக்கள் ஒன்று சேர்ந்து ஒரே கருத்தை ஏற்று கொள்வதின் முலமாக தங்களின் கடமைகளை உணர்ந்து நேர்மையான முறையில் செயல் பட்டாலே இந்த நிலமை மாறுவதில் ஐயம் ஒன்றும் இல்லை , ஆனால் இதை நாம் கடக்க வேண்டும் என்றால் பல ஏணிப்படிகள் உள்ளது ,
    இது வந்து எதோ ஒரு நாளிலோ அல்லது இந்த பதிவில் நாம் கருத்தை பதிவு செய்வதின் மூலமாகவோ நம் இந்தியாவில் உள்ள மக்களை திருத்த முடியாது , இதற்கான சரியான வழியை அணைத்து தரப்பட்ட மக்கள் மற்றும் ஊடகங்கள் மூலமாக, சரியான கருத்தை மக்களிடம் கொண்டுசெல்வதின் மூலமாக நல்லதொரு முனேற்றத்தை காண முடியும் என்பதில் நான் உறுதியாக நம்புகிறேன் ....

    இந்த பதிவில் என்னை பாதித்த மிக முக்கியமான வரிகள்


    வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு நம்மக்கான கடமையின் விதையை மனசுல விதைக்க மறந்து (மறுத்து) போகிறோம்.!

    மிகவும் சரியான கருத்து அதே சமயம் அணைத்து மக்களும் தலை குனிந்து வெட்கப்பட வேண்டிய விஷயம் .

    ReplyDelete
  2. சமுக ஆர்வலர்கள்,பத்திரிகை நண்பர்கள் , மனித உரிமை இயக்கங்கள் , அணைத்து மக்கள் நற்பணி இயக்கங்கள் , பொதுவுடைமை சிந்தனையாளர்கள், மக்கள் நலன் உள்ள நேர்மையான மருத்துவர்கள் & வழக்கரினர்கள்,அரசு அதிகாரிகள்,அறிவியல் விந்நியானிகள்,அரசு சாரா அணைத்து மக்கள் நல கழகங்கள் மற்றும் இயக்கங்கள் இவர்களின் உதவியின் மூலமாக நாம் நம் ஆக்கபுர்வமான செயல்கள் மற்றும் நாட்டின் அனைத்து தரப்பட்ட வளர்ச்சியை செம்மையகவும் , சிறப்பாகவும் செயல் படுத்த முடியும் அதற்கு மிகப் பெரிய சக்தியாக அணைத்து தொழில் நுட்ப ஊடகங்கள் உதவும் என்பதில் நான் மிகவும் நம்புகிறேன் . இந்த அறவியல் மயமான / நவீன உலகத்திற்கு நாம் நம் கருத்துகளை ஊடகத்தின் மூலமாக தான் தெரியப்படுத்தவேண்டும் அந்த அளவிற்கு ஊடகத்திற்கு சக்தி உள்ளது என்பதை நாம் மறந்து விட கூடாது ....நிச்சயம் ஒரு நல்ல வளர்ந்த இந்தியாவை காண முடியும் .

    ReplyDelete