Tuesday, May 31, 2011

நீங்க எந்த இசம்??

இன்னிக்கு வேலை கொஞ்சம் கம்மியா இருந்ததால, மதிய உணவுக்கு முன்னாடியே வலைத்தளங்களில் கட்டுரைகளை மேய ஆரம்பிச்சுட்டேன். "மச்சி, சாப்பிட போலாம் வாடா!"னு என் நண்பன் ஒருத்தன் கூப்பிட்டான். (காலைல 10.30 தான் நானும் அவனும் உள்ள வந்தோம் ; 11.30க்கு காபி; 12.45க்கு சோத்துக்கு மணி அடிச்சாச்சு.. ஹிஹிஹிஹி.. என்ன மாதிரியே அவனுக்கும் ஆணி புடுங்குற வேலை இன்னிக்கு அதிகம் இல்ல..!) வாசிப்பின் மும்முரத்தில், அழைப்பை மறந்து வாசித்துக்கொண்டிருந்தேன். "அப்படி என்ன கருமத்தடா படிச்சுகிட்டு இருக்க"னு கடுப்புல என் இடத்துக்கு வந்து கணினியை நோட்டம் விட்டான். தொழிலாளர் போராட்டம் தொடர்பா ஓர் கட்டுரை வாசித்துக்கொண்டிருந்தேன். "டே, நீ என்ன புரட்சியாலன்னு மனசில நினைப்பா? எப்ப பாத்தாலும் இதுமாதிரி எதாவது ஒன்ன படிச்சிட்டு இருக்க? நீ இது மாதிரி படிக்கறதாலையோ, எழுதுரதாலையோ, தெருவுல கத்தி போராடுரதாலையோ, இங்க எதுவும் மாற போறது இல்ல.. எங்கயோ நடக்குற சண்டைக்கு இங்க தெருவுல உட்கார்ந்து தொண்டை கிழிய கத்துரனால ஒன்னும் புடுங்க முடியாது..(இலங்கை போர் நிறுத்தம் வேண்டி 'மென்பொருள் துறை சார்பாக' ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டதில நான் கலந்துகிட்டது!)... எப்ப பார்த்தாலும் எதாவது ஒரு பாக்டரில போனஸ் கேட்டு கொடிய புடிச்சுகிட்டு 'சாகும் வரை உண்ணாவிரதம்!' இருக்க வேண்டியது! அப்புறம் காசு வாங்கிட்டு கலஞ்சு போக வேண்டியது! இந்த IT யாவது நல்லா இருக்க விடுங்கடா.. இங்கயும் போராட்டம் உண்ணா விரதம், இட ஒதுக்கீடுனு கொண்டு வந்திராதீங்க!!"னு நக்கலாக பேசிக்கொண்டே போனான்..

அவன் பேச பேச எனக்கு தலை சுற்றியது..! "இவன் தெரிஞ்சுதான் பேசுறானா.. இல்லை தெரியாம பேசுறானா??"னு ஒரே குழப்பம் வேறு. ஒரு கட்டத்தில் வாக்கு வாதமாய் மாறிப்போனது.. இதை கேட்டுக்கொண்டிருக்கிற உங்களுக்கும் "அவர் சொல்வது நியாயம் தானே!" என்கிற எண்ணம் வராலம். இதை கொஞ்சம் விரிவாகவே புரிந்து கொள்ள, உங்களது ஆழந்த கவனிப்பு தேவையாகிறது..

ஒரு நாளைக்கு 16லிருந்து 18 மணி நேர வேலை, மிக மிகக் குறைந்த ஊதியம், பல இடங்களில் வேலைக்கு உணவு மட்டுமே( ஒரு குடும்பத்தில் அனைவரும் சாப்பிட வேண்டுமானால், எல்லோரும் அங்கே வேலை செய்தாக வேண்டும். கல்வி என்பதே கனவு தான்), எப்பொழுது வேண்டுமானாலும் வேலை போகலாம், விடுமறை கிடையாது’, என்பதான அடிமைத்தன நிலையை மாற்றி, 'குறைந்த பட்ச ஊதியம், ஊதிய உயர்வு, ஆயுள் காப்புரிமை, போனஸ், பணி நிரந்தர உறுதி' - என மிக அடிப்படையான தேவைகளை பெற்றுத்தந்தது, இப்படியான அடக்குமுறைகளுக்கு எதிராக எழுந்த குரல்களும் அந்த பின்னால் இருக்கின்ற தொழிற்சங்கங்களும் தான்! நாம் இன்றைக்கு என்னதான் மிக அதிகமான ஊதியத்தில் சொகுசாக வேலை செய்து கொண்டிருந்தாலும், இந்த வசதிக்கு பின்னால் வார்ப்படமாய் மறைந்து போன ஒரு தொழிலாளியின் கூக்குரல் உள்ளது என்பதை மறந்து போக கூடாது..!! இன்றைய இளைய சமூகம் இதை மறந்து போனதும் வருத்தத்திற்குரிய விசயமே.. அடுத்தடுத்த தலைமுறைக்கு வரலாற்றை எடுத்துச்செல்ல முயலாதது மிக பெரிய குற்றம். எனக்கான கோபமும் அதுவே..!

மே 1 என்றால் விடுமுறை, அன்றைய தினம் உழைப்பாளர் சிலைக்கு மரியாதையை. எல்லா 'இச'த்தலைவர்களுக்கும் மாலை. அதோடு முடிந்து போனது மே தின கொண்டாட்டம்.(இதுகிடைல, டிவில ஒரு 'மே தின சிறப்புப் படம்!' அதுல ஹீரோவும் ஹீரோயினும் நேருக்கு நேர் மோதிக்குவாங்க.. அப்புறமா லவ் பண்ண தொடங்கிருவாங்க! கருமம் கருமம்!!)

யூனியன், சுத்தியல் அருவாள்போட்ட சிகப்புக் கொடி, உண்டியல், தேர்தலுக்கும் காசுக்கும் கால ஓட்டத்தில் நீர்த்துப் போன தொழிற்சங்க அமைப்புகள்- இதையெல்லாம் தாண்டி 19 நூற்றாண்டில் மத்தியில் தொடங்குகின்ற தொழிலாளர் போரட்டத்தை இணையத்தில் படித்துப்பாருங்கள் ! புரியும்.. அவ்வளவையும் விளக்க இந்தப் பதிவு போதாது!! எட்டுமணி நேரப்பணி, கட்டாய வார/வருட விடுமுறை, ESI, PF, Life Insurance, Medical Insurance, Canteen Food (sometimes Sudoxo food pass to get tax exception), Casual Leave, Maternity Leave, Paternity Leave, Bonus etc., - எங்கிருந்து வந்தது இவ்வளவும்??!! இன்றைக்கு வசதியாய் அனுபவித்துக்கொண்டிருக்கிற பல சலுகைகளை உரிமைகளாக்கிக் கொடுத்துப்போனது, உலகெங்கும் இதற்காகக் காலங்காலமாய் போராடி மடிந்துபோன தொழிலாளர்கள் அல்லவா?? அகிம்சையை போதிக்கிற கல்விமுறை இதை ஏன் கற்பிக்கவில்லை?? எல்லா இசங்களும் சாக்கடையில் கலந்துபோனதால் என்னவோ, கடைசி வரை கூக்குரல் இட்டவனை மறந்துபோனோம்!!

கல்விக் கண் திறந்த காமராஜர், குலக்கல்வியை எதிர்த்து, பகுத்தறிவு போதித்து, சாதியம் துடைக்க போராடின பெரியாரின் வரலாறுகளை இன்றைய குழந்தைகளுக்கு முறையாகச் சொல்லி இருக்கிறோமா?? பெரியரா - நீ திக! சாமிய கும்பிடாதவன்!; காமராஜரா - அது காங்கிரசு! (விருதுநகர் பக்கம் போன அவர நாடாரா மாத்திருவாங்க! எனக்கு தெரிஞ்சு மார்க் வாங்க மட்டுமே ஒரு சில கட்டுரைக்குள்ள அவங்கள அடக்கீறாங்க!)
என்னைப் பொறுத்த வரையில் வரலாறை மறந்து போன சமூகம் சாக்கடைக்குச் சமானம்! வேர்களை மறந்து, மரங்கள் வளர்வதில்லை!!

"தப்பை தட்டி கேட்குறதையும், உண்மைக்கு தோல்குடுக்குறதையும், கடந்து வந்த பாதைய வரலாறா வார்ப்பெடுக்கறதும் நாம அடுத்த தலைமுறைக்கு விட்டுப்போகிற உண்மையான சொத்தல்லவா??" என்ன சார் நான் சொல்றது??

'தம்பி' படத்துல கதாநாயகன் தான் மேல குற்றம் சொன்ன ஒரு மாணவன பார்த்து ஒரு கேள்வி கேட்பாரு !
ஹீரோ:-"ரோட்டல ஒருத்தன் அடிபட்டு சாக கிடக்குறான்..! அப்போ நீ என்ன பண்ணுவ??"
மாணவன்:- "ஓடி பொய் காப்பத்துவேன்.. ஹாஸ்பிட்டல்கு தூக்கிட்டு ஓடுவேன்! ஏன் கேட்குறீங்க??"
ஹீரோ:- "அப்போ நீ கம்யூனிஸ்ட்டா??!!"

7 comments:

  1. good article.. havn't thought of all these... thanks for sharing!

    ReplyDelete
  2. வணக்கம் நண்பா !!!
    தங்களுடைய பதிவை இப்பொழுது தான் படித்து முடித்தேன் ... மிக மிக அருமை ...
    தங்களுடைய ஒய்வு நேரத்தை மிகச்சரியாக, பயன்படுத்திர்கள் என்று தெரிகிறது ....
    வளர்க தங்களின் சிந்தனை தொடருட்டும் தங்களின் நல் பதிவுகள்
    இவன் ...மிகச் சாதாரண மனிதன் ...
    பாலாஜி ராவ்

    ReplyDelete
  3. "தப்பை தட்டி கேட்குறதையும், உண்மைக்கு தோல்குடுக்குறதையும், கடந்து வந்த பாதைய வரலாறா வார்ப்பெடுக்கறதும் நாம அடுத்த தலைமுறைக்கு விட்டுப்போகிற உண்மையான சொத்தல்லவா? "
    உண்மை பொதிந்த வரிகள் :)
    மிகவும் அருமையான் பதிவு :)

    ReplyDelete
  4. //என்னைப் பொறுத்த வரையில் வரலாறை மறந்து போன சமூகம் சாக்கடைக்குச் சமானம்!//
    // வேர்களை மறந்து, மரங்கள் வளர்வதில்லை //

    நெத்தியடி வாசகங்கள்.... அருமையான பதிவு....இத படிச்சிட்டு soooper Ravi னு கமெண்ட் போட்டுட்டு IPL match பார்க்க போவாம நாமளும் இந்த சமுதாயத்துக்கும்...நம்ம அடுத்த தலைமுறைக்கும் முடிந்த அள்வு நல்லது செய்யலாமே?

    நட்புடன்
    நவீன்

    ReplyDelete
  5. anivarukkum nandri !!

    ReplyDelete