Tuesday, June 28, 2011

நீர் பிறக்கும்முன் !!

நீர் பிறக்கும்முன் !!
எழுதியவர் இந்திரா ; கிழக்கு பதிப்பகம்.


இந்த புத்தகத்தை எழுதியவர் எனக்கு பரிச்சயமான ஜோதி அக்கா என்கின்ற அளவிலேயே இதை வாசிக்கத்தொடங்கினேன்... புத்தகம் நூறு பக்கத்திற்குள் அடங்கியது எனக்கு இன்னும் சௌகர்யமாய்ப் போனது.. சற்றும் எதிர்பார்க்காமல் முதல் பக்கத்திலேயே என்னை புரட்டிப் போட்டது- எழுத்து நடையும். அது தாங்கிய அதிர்வும்..

இருபத்திமூன்று வயதில் நீங்கள் என்னவாக ஆசைப்பட்டிருப்பீர்கள்?? நிற்க, கொங்கு மண்டலத்தின் கிராமத்தில் பிறந்து, பாரதிராஜா படங்களின் சாயல் மாறாத மனிதர்களின் ஊடே வார்கப்படுகின்ற நிலையினின்றும் இந்தக் கேள்விக்கான பதிலை சிந்திக்க வேண்டியது மிக அவசியமாகிறது..! சமுதாயம் மற்றும் குடும்பத்தின் பலத்த எதிர்ப்புகளை மீறி 23 வயதில் பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட்டு, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தனது பகுதிலுள்ள தலித் மக்களின் பதினைந்தாண்டுகால குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண, தான் மேற்கொண்ட தொடர் போராட்டத்தையும், பெண் என்பதாலேயே தான் அடைந்த அவமானங்களைத் தாண்டி, பூச்சுகள் ஏதுமின்றி நம்முடன் பகிர்கின்ற அனுபவ பகிர்வே இந்த புத்தகம்.

வட்டார வழக்கும், அது சார்ந்த பண்பாடும், சமூக கட்டமைப்பும், இவற்றைத் தனியே விளக்காமல், இயல்பாகவே இழையோடியிருப்பது பாராட்டுக்குரியதே... நம்மோடு இருந்தாலும், நம்மால் அதிகம் கவனிக்கப்படாத பஞ்சாயத்துகளின் மிக நுணுக்கமான உட்கட்டமைப்பை வாசிப்பின் ஊடே உணர வைத்தது, தளத்தை பலப்படுத்திக் காட்டி இருப்பது, பகிர்வின் ஓட்டத்தை யாதொரு விலகளுமின்றி தெளிவுபடுத்தி இருக்கிறது! மிகச் சாதாரணமாய் நிழல் பரப்பிக்கிடக்கின்ற இந்த பஞ்சாயத்து அலுவலகத்திலா கோடிக்கணக்கில் பணம் புழங்குற இடம் என்றறிகிற போதும், அது சார்ந்த கீழ்த்தனமான அரசியலாகட்டும், ஆதிக்க சமூகத்தின் முகத்திரையை உரித்துக்காட்டுவதாகட்டும், ஒடுக்கப்பட்டவர்களின் உணர்வை நம்மில் உயிர்ப்புருவதாகட்டும், போகிற போக்கில் இதயெல்லாம் நம்மிடம் பேசுவதைப்போல சொல்லிப்போகிற போது நம்மால் வியக்காமல் இருக்க முடியவில்லை..

பொதுவாக அனுபவப் பதிவை எழுதுகிறவர்கள் அடிநாதமாய்த் தங்களின் தீரங்களை கதாநாயகனுக்குரிய தோரணையோடு மறைமுகமாக ஆங்காங்கே பதிவுசெய்து போவதுண்டு. ஆனால் இந்த ஓட்டத்தின் வழியெங்கும் அவர் தன் இயலாமையை, தோல்விகளை, அச்சத்தை, சறுக்கல்களை, சூழ்நிலைக் கைதியாய்த் தான் ஆக்கப்பட்டதை, தேர்ந்தெடுத்த மக்களாலேயே புறக்கணிக்கப்பட்டதை, பெண்ணுக்கென உருவாக்கப்பட்ட பலகீனமான தருணங்களை எவ்விதப் பாசாங்குமின்றிப் படைப்பில் பதிவுசெய்திருக்கிறார். இந்த உயிர்ப்பே படைப்பை வாசக அனுபவத்திற்கு நெருக்கத்தில் வைக்கின்றது. அது உண்மையும் கூட..

வாசிப்புக்குரிய நூல்...!

[ குறிப்பு : ஆசிரியரின் இயற்பெயர் ஜோதிமணி. தமிழில் பட்டம் பெற்றவர். 2 முறை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக இருந்தவர். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர். தமிழ்நாடு திரைப்பட தணிக்கைக் குழு உறுப்பினர். ]

1 comment: